சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- ஐகோர்ட் அறிவுரை
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி மகளிர் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தனது தாய் மைதிலியை வேலூருக்கு மாற்ற கோரி மகள் சரண்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கைதியிடம் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு சிறைக்கு மாற்ற முடியாது என்றும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறைக்கு போதை பொருள் எப்படி வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சிறையில் கைதிகளுக்கு வசதிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக சுட்டிக் காட்டினார். கைதிகளை பாரபட்சமாக நடத்துவதால் சிறைக்குள் பிரச்சினை ஏற்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டப்படி அனைத்து கைதிகளையும் சமமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர். சிறைக்குள் குற்றங்களில் ஈடுபடும் கைதிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று தெளிவு படுத்திய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.