×

அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2,100 வழங்கப்படும்..!

 

அரியானாவில் மொத்தம் 90 -சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கு வரும்  5-ம் தேதி வாக்குப் பதிவு  நடைபெறுகிறது.   8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 

தற்போது அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்து வருகின்றன.  வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில்,  நேற்று பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.  அதில், அரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.  

பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்த நிலையில் பா.ஜ.க. ரூ. 2,100 அறிவித்துள்ளது. பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- 

அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ. 500 உதவித்தொகை வழங்கப்படும். தெற்கு அரியானாவில் சர்வதேச அளவிலான பூங்கா அமைக்கப்படும். தொழிற்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரியானாவில் வசிக்கும் அக்னி வீரர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பா.ஜ.க. அளித்துள்ளது.