×

ஆன்லைன் ரம்மிக்கு அம்பாசிடர்.. நீட் தேர்வுக்கு PRO ஆளுநர் ரவி - அமைச்சர் ரகுபதி காட்டம்.. 

 

தான் ஒரு ஆளுநர் என்பதை மறந்துவிட்டு, ஒரு அரசியல் வாதி போல் ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் எனவும், ராஜ்பவன் இன்றைக்கு அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் ரவி அவர்கள், தான் ஆளுநர் என்பதை மறைந்துவிட்டது ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் இன்றைக்கு  அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கமலாலயத்துக்கு போட்டியாக ராஜ்பவன்,  டெல்லியின் சார்பாக அரசியல் செய்து வருகிறது. 

ஒரு ஆளுநர் இந்திய அரசுக்கு, மாநில அரசுக்கும் இருக்கும் உறவினை உருவாக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் நம் ஆளுநர் அந்த உரவை  எந்தெந்த வகையில் துண்டிக்க முடியுமோ? அந்தந்த வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. ஆன்லைன் ரம்மியின் பிராண்ட்  அம்பாசிடர் போலவும் மற்றும் நீட் தேர்வின் பிஆர்வோ போலவும் செயல்பட்டு வருகிறார். 

காந்தி மண்டபம் வளாகத்தில் மது பாட்டில்கள் கிடந்ததாகவும்,  அது மிக வருத்தம் அளிக்கிறது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். காந்தி மண்டபத்தில் ஆளுநர் மற்றும் அவரிடம் சென்ற கேமராமேன்  கண்களுக்கு மட்டும் எப்படி மது பாட்டில்கள் தெரிந்துள்ளது.  சென்னை மாநகராட்சி காந்தி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் சிறப்பான சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாக குப்பை  இருக்கும் இடமான மெரினா கடற்கரை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளும் அரசாங்கம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 

வீட்டை  நாம் பாதுகாப்பாக தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வீட்டில் ஒரு திருடன் பூந்து விட்டால் நம் வீட்டில் பாதுகாப்பு இல்லை என கூறிவிட முடியாது. ஏன் திருடன் வரும்பொழுது பாதுகாப்பு குறைவாக இருந்தது என்று கண்டறிவதை விட்டுவிட்டு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் உள்ளது என அவருடைய மன உளைச்சலை வெளிப்படுத்தியுள்ளார் அவருக்கும் தெரியும் காந்தியடிகள் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ஆனாலும் இந்திய முழுவதும்  பல  சூதாட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது 

திராவிட திமுக அரசு மதுவிலக்கு  எப்போதும் ஆதரவாக உள்ள அரசு.  ஆனால் மது ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு மட்டும் கையில் எடுக்க முடியாது அனைத்து மாநிலங்களை ஒன்றிணைத்து  ஒன்றிய அரசு தான் அந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கை அதிகப்படியான முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்றார்.  

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது  இந்திய முழுவதும் ஒரு திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும். மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில், நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச்சாராயம் பெருகும்;  இதன் காரணமாக இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடைமுறை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்வார். 

தமிழகத்தில் அனைவரும் அண்ணன் தம்பி என்று தான் உள்ளோம் , இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் என்று உணர்வோடு தான் இருக்கிறார்கள் , ஒருவரை பார்த்தவுடன் இவர் எந்த ஜாதி என வாய் விட்டு கேட்காதே நிலையில் உள்ளார்கள். இந்தியாவில் அமைதி பூங்கா தமிழ்நாடு தான்; அனைவரையும் சகோதரத்துவம் கொண்டு பார்ப்பது தமிழகம் தான்.  தமிழகத்தில் தலித்துகள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள் என எந்த புள்ளிவிவரமும் கிடையாது. தலித்துகளை மட்டும் தாக்க வேண்டும் என எவரும்  முயற்சி செய்யவில்லை.   

ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஆளுநர்  அரசியல் செய்யும் காரணங்களால் தான் இங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இதுவரை இந்தியாவில் இருக்கும் எந்த ஆளுநரும் ஒரு பொதுக்கூட்டம் போல் மக்களை கூட்டி பேசியதில்லை.  நாங்கள் ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவர் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டுமே . ஆளுநர் ஆர்.என்.ரவி,  மேகாலயா, பீகார் போன்ற பல்வேறு வட  மாநிலங்களுக்கு சென்று அங்கு  பணியாற்றியுள்ளார்.  ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சியுடன் மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் இருக்கும் வித்தியாசத்தை  பேச தயாராக இருக்கிறாரா ?  நாங்களும் அனைத்து மாநிலங்களுக்கும் என்றெல்லாம் தமிழகத்தில் இருக்கும் சமத்துவத்துவத்தை போல் இந்தியாவில் வேரு எந்த மாநிலமும் இல்லை.