×

“அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது”- ஏ.ஆர்.ரகுமான் மகன்

 

அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் வேதனை தெரிவித்துள்ளார்.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே ஏ.ஆர்.ரகுமானின் குரூப்பில் உள்ள கிட்டாரிஸ்ட் மோகினிடே தனது கணவர் மார்க் ஹார்ட்சுக்கை விட்டு பிரிவதாக இன்ஸ்டாவில் அறிவித்தார். இது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என மோகினி டே தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கும், பேஸிஸ்ட் மோகினி டே விவாகரத்துக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது அனைத்தும் வதந்தியே எனக் கூறியுள்ள அமீன், “என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் மட்டுமல்ல... பண்பு, அன்பு, மரியாதை என அனைத்தினாலும் ஒரு லெஜண்ட்டாக இருக்கிறார். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில், அதில் உண்மையும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.