×

"கழிவுநீர் அகற்றும் பணி : மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு கடும் தண்டனை தேவை" - தினகரன் 

 

மனிதக் கழிவுகளை அகற்றுவதால் ஏற்படும்  உயிரிழப்புகளை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் திரு.சுரேஷ் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழப்பில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50க்கும் அதிகமான பணியாளர்கள் கழிவுநீர் அகற்றும் பணியின் போது உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த ஒரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், இயந்திரங்களை கொண்டே கழிவுநீர் அகற்றப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு முறையாக கடைபிடிக்கப் படுவதில்லை என்பதை அடிக்கடி நிகழும் மரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.தொடர்ந்து நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க, அரசின் உத்தரவை மீறி கழிவுநீர் அகற்றும் பணியில் சட்டவிரோதமாக மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு வழங்கப்படும் தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டம் குறித்தும், விஷவாயு மரணங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உயிரிழப்புகளை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.