தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு- தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட அவமதிப்பா?: டிடிவி தினகரன்
சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட அவமதிப்பா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தின் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” எனும் வரி விடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்டு நடைபெற்ற அவமதிப்பா? என்பது குறித்து சென்னைத் தொலைக்காட்சி நிலையம் விரிவான விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.