×

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீரை சேமிக்க ராசிமணலில் அணை கட்ட வேண்டும்- தினகரன்

 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க ராசிமணலில் அணை கட்ட வேண்டியது மிக அவசியமானது என்ற தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மேட்டூர் அணையிலிருந்து உபரியாக வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ராசிமணலில் புதிய அணை கட்டுவதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.பி.ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். ஒகேனக்கலுக்கு மேல்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி வன எல்லையில் ராசிமணல் பகுதியில் புதிய அணையை கட்டுவதற்காக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அடிக்கல் நாட்டியது தொடர்பாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ராசிமணல் அணை கட்டுமானம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் காவிரி நீரை உரிய நேரத்தில் தர மறுக்கும் கர்நாடக அரசு, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களை முன்னெடுத்து காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் நோக்கில் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பயனின்றி வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும் ராசிமணலில் அணை கட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக தொடங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.