×

“குடிக்க தண்ணீர் கொடுங்க பாட்டி”... நல்லவன்போல் நடித்து மூதாட்டியை கொன்ற பொறியியல் பட்டதாரி

 

சென்னை மயிலாப்பூரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் சோலையப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 74 வயது மூதாட்டி செண்பகம். இவரது கணவர் கல்யாணசுந்தரம் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். செண்பகத்திற்கு 2 மகன்கள். ஒருவர் ஆஸ்திரேலியாவிலும், மற்றொரு மகன் கும்பகோணத்திலும் வசித்து வருகின்றனர். செண்பகம் தனியாக வசித்து வந்ததால் அவரது தங்கை ரங்கநாயகி தினமும் சென்று அவரை பார்த்து விட்டு உதவிகளை செய்து வருவது வழக்கம். கடந்த 21 ஆம் தேதி ரங்கநாயகி அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது சமையலறைக்குள் செண்பகம் வலிப்பு வந்தது போல் படுத்து கிடந்தார். உடனடியாக ரங்கநாயகி அக்கம்பக்கத்தினர் உதவியோடு ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். 

இது குறித்த தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 5 சவரன் தங்க நகை,  3 சவரன் எடையுள்ள வளையல்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 3.20 லட்சம். மேலும் செண்பகம் கழுத்தை நெரித்து தாக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் பிறகு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செண்பகம் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவிக்கள் எதுவுமில்லை. இதனால் சோலையப்பன் தெருவில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டி வீட்டருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் வீட்டிற்குள் சென்று வந்தது பதிவாகி இருந்தது.  உடனே போலீசார் அந்த இருசக்கர வாகனத்தில் எண்ணை வைத்து  ராயப்பேட்டை உசைன் கான் தெருவை சேர்ந்த அசார் ஷுசையின் (29) என்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு கொரியர் பாய் போல ஒரு பார்சலுடன் அவரது வீட்டு வாசலில் நின்று முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து, பிறகு தண்ணீர் கேட்டு  நடித்து  வீட்டுக்குள் நுழைந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த  தங்க நகைகளை திருடி அடகு கடையில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதைடுத்து அசார் ஷுசைனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அசார் அடகு வைத்த நகைகளை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொறியியல் பட்டதாரியான அசார் முதலில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் வேலையை விட்டு நின்றதுடன், நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட தவறான வழிகளில் ஈடுபட்டு, 30 லட்சம் ரூபாய் கடனாளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகத்தான் தந்தையின் பிசினஸ்க்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் விரக்தியான அசார் தனியாக முதியவர்கள் வசிக்கும் வீடுகளை தேடி பல நாட்களாக இருசக்கர வாகனத்தில் அலைந்துள்ளார். மயிலாப்பூர் சோலையப்பன் தெருவில் சுற்றிய போது தான் மூதாட்டி செண்பகம் தனியாக வசிப்பது தெரியவந்து கைவரிசை காட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.