எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர்தான்- அன்பில் மகேஷ்
நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர்தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள வி.ஆர்.டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கலை அரங்கத்தை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இவ்விழாவுக்கு வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பள்ளி மாணவிகள் மகிழ்ச்சியுடன் பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர். தொடர்ந்து விழா மேடையில் பலரும் அமைச்சரிடம் தங்களது மனுக்களை அளித்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுவை அங்கேயே உடனடியாக பிரித்து படித்து, ஒவ்வொரு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் மனுவில் கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மேடையிலேயே தெரிவித்தார்.
மேலும் மாணவர்களிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “முதல்வர் ஸ்டாலின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம், ஊக்கத்தொகை, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறோம். மாணவர்கள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவரும் தங்கள் வகுப்பில் பின்தங்கியுள்ள மற்ற மாணவர்களுக்கு டீச்சராக மாறி, படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் முன்னேறவும் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர்தான். அவரைப் பார்க்கப் போகும்தெல்லாம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களைப் போல தயாராகி செல்வேன்” என்றார்.