“தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல- நூல் விலையை குறையுங்கள்”
பாடநூல்களின் விலையை 40% உயர்த்துவதா? உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்களின் விலைகளும், போட்டித் தேர்வுக்கான நூல்களின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான பாட நூல்களில் விலைகளும் சராசரியாக 40% முதல் 45% வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஏழாம் வகுப்புக்கான பாடநூல்களின் விலைகள் இதுவரை இல்லாத வகையில் ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் விலை உயர்த்தப்படாத பொருட்களும் இல்லை; கட்டணம் உயர்த்தப்படாத சேவையும் இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து விலைகளையும், கட்டணங்களையும் உயர்த்தி விட்ட தமிழக அரசு, இப்போது மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் பாடநூல் கட்டணங்களை உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் தான் பாடநூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று கூறி தமிழக அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகிய இரு வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு இணையாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல.
அரசு பள்ளிகளில் கல்வித்தரம் இல்லாததாலும், ஆங்கிலவழிக் கல்வி மோகம் காரணமாகவும் தனியார் பள்ளிகளில் ஏராளமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகள் படிக்கின்றனர். கல்விக் கட்டணத்தையே கடன் வாங்கிச் செலுத்தும் அவர்களால் புத்தகத்துக்காக இவ்வளவு பணத்தை செலவழிக்க முடியாது. அவர்களின் நிலையையும் தமிழக அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு துரத்தும் தமிழக அரசு, புத்தகத்தின் விலைகளையும் உயர்த்தி அந்த மாணவர்களின் கல்வி வாய்ப்பைக் கெடுக்கக் கூடாது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விலைகளை குறைக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கும் இலவசமாக பாடநூல்களை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.