×

நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்க கூடாது - அன்புமணி வலியுறுத்தல்

 

நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்க தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து சொத்து ஆவணங்களின் நகல்களை எவர் வேண்டுமானாலும் பணம் செலுத்தி பெறலாம் என்ற நடைமுறை இருப்பதாகவும், அதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை என்றும் பத்திரப்பதிவுத்துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. போலியான ஆவணங்களைத் தயாரித்து சொத்துகளை அபகரிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், சொத்து ஆவணங்களை நிபந்தனையின்றி வழங்குவது மோசடிகள் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். கோவையைச் சேர்ந்த இந்து சக்திவேல் என்பவர், பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தமது சொத்துகள் தொடர்பான ஆவணங்களை சிலர் பணம் செலுத்தி பெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்றும், அவர்கள் குறித்த விவரங்களை தமக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி பத்திரப்பதிவுத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பித்திருக்கிறார். அவர் கோரிய விவரங்கள் வழங்கப்படாத நிலையில் மாநிலத் தகவல் ஆணையத்திடம் இந்து சக்திவேல் மேல்முறையீடு செய்தார்.

தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையர் ஷகீல் அக்தர் முன்னிலையில் மேல்முறையீடு விசாரணைக்கு வந்த போது பத்திரப்பதிவுத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பத்திரப்பதிவுச் சட்டத்தின் 57&ஆம் பிரிவின்படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி எவர் வேண்டுமானாலும் யாருடைய சொத்துகள் தொடர்பான ஆவணங்களின் நகல்களையும் பெறலாம்; அவ்வாறு ஆவணங்களை பெறுவோரின் விவரங்களை நாங்கள் கோருவதும் இல்லை, பதிவு செய்வதும் இல்லை. நகல் வழங்கப்பட்ட சொத்து ஆவணம் தொடர்பான குறிப்பு எண் மட்டுமே பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுத்துறை கடைபிடித்து வரும் இந்த நடைமுறை ஆபத்தானது; மோசடிகளை ஊக்குவிக்கக் கூடியதாகும். நில ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் அரும்பாடு பட்டு ஈட்டிய பணத்தைக் கொண்டு நிலத்தை வாங்கிய பலர், அந்த நிலத்தை போலி ஆவணத் தயாரிப்பு மோசடி கும்பலிடம் இழந்து தவிப்பது தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களிலும் போலி நில ஆவண மோசடி குறித்த பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் நிலங்களின் ஆவணங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப் படுவது தான். மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும் இந்த விதி நீடிக்கக்கூடாது.

போலி நில ஆவண மோசடி கும்பல்களிடம் நிலத்தை இழந்தவர்கள். அதை மீட்பதற்காக நடத்தும் போராட்டம் கன்னித்தீவு கதையை விட மிக நீண்டது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகும் தங்கள் நிலத்தை மீட்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் உள்ளன. இவற்றையெல்லாம் அறிந்த பிறகு தான், போலி ஆவணங்களை தயாரித்து ஏதேனும் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், அப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத்துறை தலைவர் அல்லது மாவட்ட பதிவாளருக்கு வழங்கி பத்திரப்பதிவு சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. அதற்காக பத்திரப் பதிவு சட்டத்தில் 77&ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. மோசடி நடந்தால் அதை சரி செய்வதற்கான தீர்வை கொண்டு வந்திருக்கும் தமிழக அரசு, அத்தகைய மோசடியே நடக்காமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அக்கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது. ஒருவருடைய சொத்துகளின் ஆவணங்களை, அதன் மீதான வில்லங்கங்கள் குறித்து அறிவதற்காக, அந்த சொத்துகளை வாங்க நினைப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய தேவை ஏற்படும். மற்றவர்களுக்கு அத்தகைய தேவை எதுவும் இல்லை.