×

ஆந்திரா மழைவெள்ளம் : ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்.. 

 

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பாதிப்புகளை சீரமைக்க , முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பிரபல வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.  


ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் இரு மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர், எல்லூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில்  15 பேர். தெலங்கானாவில் 16 பேர் என மழை வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  இரு மாநிலங்களிலும் சுமார்  2. 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழையால் பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 120 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன 64 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு பிரிவினரின் 40 குழுக்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ரூ.25 லட்சத்தை , முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சமீபத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.

இந்த மாநிலம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த சவாலான நேரத்தில் அதை திரும்ப கொடுப்பதே எங்கள் கடமை என்று நினைக்கிறோம். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் சமூகங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதைக்கான ஒன்று என்பதையும் நாங்க குறிப்பிட விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. 


 

null