×

பொறியியல் வகுப்புகள் செப்.2ல் தொடங்கும் - அன்ணா பல்கலை. அறிவிப்பு.. 

 


பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம்  2,33,376 இ்டங்கள் உள்ளன. இதில் பொறியியல் கலந்தாய்வு மூலம்  1,79,938 இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக பொறியியல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது.  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை நடைபெற்றது.  இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றனர்.  

இந்நிலையில் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், பி.இ, பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி (5ஆண்டுகள்) பாடப்பிரிவில் பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ம் தேதி தொடங்கும் என்றும், முன்னதாக ஆக.21ம் தேதி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.  முதல் செமஸ்டர் வகுப்புகள் நடைபெறும் கடைசி வேலை நாள்  டிச.13ம் தேதியாக இருக்கும் எனவும், டிச.23ம் தேதி கடைசி தேர்வு நாளாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.  

பி.ஆர்க் மாணவர்களுக்கு செப்.2ம் தேதி அறிமுக நிகழ்ச்சியும், 18ம் தேதி வகுப்புகளும் தொடங்கும் எனவும்,  டிச.24ம் தேதி கடைசி வேலைநாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன்  டிச.30ம் தேதி கடைசி தேர்வு நாளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.