×

சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?- அண்ணாமலை

 

கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே, 'சனாதன தர்மம்' என்ற வார்த்தை இருந்தது என்பது நிதர்சனமான உண்மை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.

யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே, 'சனாதன தர்மம்' என்ற வார்த்தை இருந்தது என்பது நிதர்சனமான உண்மை. கிறிஸ்துவ மிஷனரிகளின் சித்தாந்தையே நீங்களும், உங்கள் தந்தையும் உங்களுடைய சித்தாந்தமாக பெற்றுள்ளீர்கள். தமிழகம் ஆன்மிக பூமி, இதுபோன்ற நிகழ்ச்சியில் மைக்கை பிடித்துக் கொண்டு மனகுமுறல்களை கொட்டதான் உங்களால் முடியும். நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை நாட்டின் 142 கோடி மக்களும் கண்டிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு நேற்று வெளிவந்துள்ளது, குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிப்பதே இனப்படுகொலை. சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?..." எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.