×

அன்னபூர்ணா சீனிவாசம் அவமதிப்பு -  மன்னிப்புக்கேட்ட அண்ணாமலை.. 

 

 அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார்.  வீடியோவை வெளியிட்டு தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  


கோவை கொடிசியாவில்  தொழில்துறையினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.   இதில் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் புகார் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  அவர், “ஸ்வீட்டுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் உள்ளது.  காரத்திற்கு 12% சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ளது. அதற்கு இன்புட் கிடையாது.  பேக்கரியில் பிரெட், பண்ணு தவிர எல்லாவற்றிற்கும் 28 % வரி உள்ளது.  ஒரே பில்லில்.. ஒரு குடும்பத்திற்கு வேறு வேறு ஜிஎஸ்டி போட முடியவில்லை. இதை பார்த்து கஸ்டமர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.  குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள்.. இல்லை எல்லாவற்றிற்கும் அதிகரியுங்கள்.  தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வீடியோ வைரலான நிலையில், நேற்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னப்பூர்ணா குழும தலைவர் சீனிவாசன் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.  மேலும், தான் எந்தக் கட்சியையும் சாராதவர், தயவு செய்து என்னை மன்னியுங்கள் என அவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியானது.  இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.  மக்களின் நியாயமான  பிரச்சனையை கூறியதற்கு மன்னிப்புக் கேட்கவைத்திருப்பது, பாசிசத்தின் உச்சம் என நெட்டிசன்கள் கடுமையாக சாடினர்.  

இந்த நிலையில்,  அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ தமிழ்நாடு பாஜக சார்பாக, மதிப்பிற்குரிய வணிக உரிமையாளருக்கும் எங்கள் மாண்புமிகு நிதியமைச்சருக்கும் இடையேயான  தனிப்பட்ட உரையாடலைப் பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயலுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  

அன்னபூர்ணா உணவகங்களின் மதிப்பிற்குரிய உரிமையாளரான திரு சீனிவாசன் அவர்களுடன்  நான் பேசினேன், இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.