"பங்காளி கட்சிகளை அழிக்கவே தமிழகத்தில் பாஜக இருக்கிறது" - அண்ணாமலை
மாநிலத்தின் தலைநகரத்தை முறையாகப் பராமரிப்பது குறித்து ஒன்றும் தெரியாத திராவிடக் கட்சிகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பிரசித்தி பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் வாழும் ஆவடி சட்டமன்ற தொகுதியில், பெரும் எழுச்சியோடு பொதுமக்கள் சூழ, ஒரு மாநாடு போல சிறப்பாக நடைபெற்றதில் பெரும் மகிழ்ச்சி.
நம் எல்லோரையும் காக்கும் ஆதி சக்தியாக அன்னை கருமாரி விளங்குகிறாள். ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில் அவல நிலையில் உள்ளது. எப்படி பகுதிநேர ஆசிரியர், தற்காலிக செவிலியர்கள் நியமிப்பார்களோ, அதுபோல, கோவில் நிர்வாகம் தற்காலிக அர்ச்சகர் நியமித்து, அவர் நேற்று அம்மன் கழுத்தில் இருக்கும் 8 சவரன் நகையைத் திருடி பிடிபட்டிருக்கிறார். கண்காணிப்பு கேமரா இருக்கும் காரணத்தினால் அவர் பிடிபட்டார். பழனி கோவில் தேவஸ்தான நிர்வாக கடையில், காலாவதியான பிரசாதத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 5,309 பசு மாடுகளைக் காணவில்லை. தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காணவில்லை. கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை. இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.
கடந்த 1961ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால் ஆவடிக்கு கொண்டுவரப்பட்டது தான் ஆவடி ராணுவ தொழிற்சாலை. காங்கிரஸ் ஆட்சியில், பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. நமது பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, “மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் பெரும் பலனடைவது, இந்தத் தொழிற்சாலையும், இங்குள்ள பணியாளர்களும்தான். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராணுவத்தின் தேவைக்கு சென்னை ஆவடி ராணுவத் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க 7,523 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆவடி ராணுவத் தொழிற்சாலை புத்துயிர் பெற்றுள்ளது.
ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் அவர்கள். வாய் கோளாறு அமைச்சர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஆனால், தற்போதைய பால் வளத்துறை அமைச்சருக்கு, ஆவடி நாசரே பரவாயில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அதிகபட்சம், கட்சிக்காரர்களை கல்லால் அடிப்பார், பலமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை ஏற்றி, அதற்கு மத்திய அரசு மீது பழியை போட முயற்சிப்பார். திருவள்ளூர் மாவட்டத்தில், இவருக்கு சம்மந்தமே இல்லாத துறையிலும் கமிஷன் வாங்குவார். திமுகவில் மற்றவர்கள் செய்யாததை ஒன்றும் இவர் செய்துவிடவில்லை. கூட்டமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கத்தானே திமுக என்ற கட்சியை நடத்துகிறார்கள். ஆவடி நாசரையும் உடனடியாக துறை இல்லாத அமைச்சராக திமுக அறிவிக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், கக்கன், லூர்தம்மா பிரான்ஸிஸ், பரமேஸ்வரன், சி.சுப்பிரமணியம் என கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று ஒரு அமைச்சரையாவது முன்னுதாரணமாக எடுக்க முடியுமா? உதயநிதியைப் போல தங்கள் குழந்தை வர வேண்டும் என்று எந்தப் பெற்றோராவது விரும்புவார்களா?
திமுகவின் ஒட்டுண்ணியாக இருக்கும் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தனியாக நின்றால் தமிழகத்தில் 12 இடங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார். தனியாக நின்றால் இந்தியா முழுவதுமே 12 இடங்கள் வாங்க மாட்டார்கள். விசிக தலைவர் திருமாவளவன், ஆறு மாதம் முன்பு வரை, கருவறைக்குள் பிராமணர் அல்லாதவர்கள் நுழைய வேண்டும் என்றார். தற்போது, பிராமணரல்லாத நமது பிரதமர் மோடி அவர்கள், அயோத்தி ராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்தபோது, அது தவறு என்கிறார். ஏழைகளுக்கான கட்சி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடிக்காக, நீதிபதிகளைக் குற்றம் சொல்கிறார்கள். பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சிகள்.
திமுகவின் பங்காளி கட்சி முன்னாள் அமைச்சர் ஒருவர், அண்ணாமலை லேகியம் விற்கிறார் என்கிறார். ஆமாம். நான் விற்கும் லேகியம் உண்டால், ஊழல் இருக்காது, லஞ்சம் இருக்காது, நிர்வாகச் சீர்கேடு இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது. இவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் பங்காளி கட்சிகளை அழிக்கவே தமிழகத்தில் பாஜக இருக்கிறது. மக்களுக்காக திராவிட அரசியலின் விஷத்தை விழுங்க பாஜக தயாராக இருக்கிறது.
தேர்தல் கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் பாஜகவுக்கு 20% வாக்குகளுக்கு மேல் கிடைக்கும், பங்காளிக் கட்சியைப் பின் தள்ளி இரண்டாவது இடம் பிடிக்கும் என்கிறார்கள். தமிழகத்தில், மக்கள் ஆதரவோடு பாஜக 30% வாக்குகள் பெற்று, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, தமிழகத்தில் இருந்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் என்பது உறுதி.
நாகாலாந்து பிரிவினைவாதிகளை அடக்கி, ஜனநாயக வழியில் கொண்டு வந்த மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், நேர்மையான துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஊழல் செய்ய விடாமல் திமுகவைத் தடுப்பதால், அவரை தரக்குறைவாக விமர்சிப்பதையே திமுகவினர் வேலையாக வைத்திருக்கிறார்கள். அதன் பெயரில், வடக்கு தெற்கு பிரிவினையை மறுபடியும் தூண்டுகிறது திமுக. கடந்த ஒரு ஆண்டில், திருப்பூரில் இருந்து, 60,000 பேர் உத்திரப்பிரதேசத்துக்கே சென்று விட்டார்கள். உத்திரப் பிரதேசம் வளர்கிறது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மூன்றாவது இடத்துக்குப் பின்னுக்கு தள்ளி, முன்னேறியிருக்கிறது. வடக்கு தெற்கு பிரிவினை வாதத்தை வளர விடக் கூடாது. நமது நாடு ஒரே நாடு உன்னத நாடு.
ரஷ்யாவின் விஞ்ஞான வளர்ச்சி குறித்து சிறுவயதில் வியந்திருக்கிறோம். இன்று, உலக நாடுகளில் முதலாவதாக, நிலவின் தென் துருவப் பகுதிக்கு சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதித்திருக்கிறோம் அதே நாளில் ரஷ்யா அனுப்பிய விண்கலம் செயலிழந்து போனது. நமது நாட்டின் விஞ்ஞானம் பல மடங்கு முன்னேறியிருக்கிறது. நாளை நமது நாட்டில் இருந்து ஒரு குழந்தை நோபல் பரிசு வாங்கும்போது, சந்திராயனும் நமது பிரதமர் மோடி அவர்களும் அதற்கு உத்வேகமாக இருப்பார்கள்.வரும் பாராளுமன்றத் தேர்தல், நமது குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். குடும்ப, ஊழல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிகாரத்திற்கு சென்றால், இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்துக்கு விமோட்சனம் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்காக, ஊழலற்ற நேர்மையான மக்கள் நலன் சார்ந்த நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சி தொடர்ந்திட, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.