×

தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுத்தும் திமுக... ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை கண்டனம்

 

தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் திரு. ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல.  கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, திரு. ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள். முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் திரு. ஆர்.எஸ்.பாரதி.

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.