×

பாஜக மன்னிப்பு கேட்டுவிட்டது- அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம்

 

கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழிலதிபர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தைகூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உணவகக் குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன், ஒரே கடையில் ஒரு வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களில் இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி, பன்னுக்கு ஒரு ஜி.எஸ்.டி., கிரீம் வைத்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி என ஏன் இத்தனை ஜிஎஸ்டி? என கேள்வி எழுப்பினார். மேலும், இதனால் வாடிக்கையாளர்களுக்கும், தொழில் நடத்துபவர்களுக்கும் முரண் ஏற்படுவதாக நியாயமான கருத்தையே முன்வைத்தார்.

இந்த கருத்தை ஆக்கப்பூர்வமான ஒன்றாக கருதி, அவர் குறிப்பிட்ட அந்த பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், குறிப்பிட்ட அந்த தொழிலதிபரை அமைச்சர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து, அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரச்சனையை முடித்துக் கொள்கிறோம் என அன்னபூர்ணா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அன்னபூர்ணா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 11 செப்டம்பர் 2024 புதன்கிழமையன்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், கோயம்புத்தூரில் உள்ள சிறும் குறு வியாபாரிகள் மற்றும் வர்த்தக சபையின் பிரதிநிதிகளின் உரையாடலின் போது எங்கள் நிர்வாக இயக்குநர், டி.ஸ்ரீனிவாசன், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி விகிதங்கள் குறித்த கேள்விகளை எழுப்பினார். இந்த உரையாடலின் போது செய்தித் துணுக்குகள் மற்றும் வீடியோக்கள் வைரலானதால், அடுத்த நாள் அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிதி அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ, சமூக ஊடகங்களில் தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை தவறாகப் பகிர்ந்ததற்காக தமிழக பா.ஜ.க மன்னிப்புக் கோரியுள்ளது. அதன் விளைவாக வீடியோவை உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைப்புகள் மற்றும் அமைப்புகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்காக ஜிஎஸ்டி கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக நிதி அமைச்சருக்கும், எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


இதன் மூலம் தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். எங்கள் விஸ்வாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.