×

போலி பேராசிரியர்கள் நியமனம் : குழு அமைத்து விசாரணை - அமைச்சர் பொன்முடி தகவல்.. 

 

தமிழகத்தில் போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது திமுக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.சி.சி பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம் பி வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தை பொறுத்தவரையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வை நீக்கி பொதுமக்களுக்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றார்.    தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் தொலைநோக்கு திட்டங்களையும் நமது முதல்வர் கொடுத்து உள்ளார் என்றும்,  இதன் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார்.   

தொடர்ந்து நான் முதல்வன் திட்டம், மதிய உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் , தமிழ் புதல்வன் திட்டம் என அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “சிறுபான்மையின பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகளுக்கு இன்று நான் முதல்வன் திட்டம் எல்லா இடத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக சிறுபான்மையின பள்ளிகளிலே படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கும் உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பையும் தமிழக முதல்வர்கள் அறிவித்து அதையும் பயன்படுத்திக் கொண்டிருகிறார்.

இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் பொதைப்பொருள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். போதை கலச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை இந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்தார்.