×

அரசு நிலத்தை ஆக்கிரமித்த கோயில்; திமுக அரசு அனுமதிக்கிறதா?- அறப்போர் இயக்கம்

 

கடவுள் பெயரால் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கிறாரா? என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவில் நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தலைமை செயலாளர் அறிக்கை அளித்து விட்டார். அந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் இருக்கும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எழுத்துப்பூர்வமான உத்தரவு கொடுத்து விட்டார்.

ஆனால் அங்கே சாலை ஆக்கிரமிப்பு கூட இது வரை அகற்றப்படவில்லை. இரண்டு திமுக கவுன்சிலர்கள் உட்பட பல கட்சி பிரமுகர்கள் இணைந்து தற்பொழுது அங்கு மேலும் சில கட்டுமானங்களை செய்து வருகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை தடுப்பது யார்? பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை மீட்டு கொடுக்க முட்டு கட்டை போடுவது யார்? கோவில் ஆக்கிரமிப்பால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள பாதாள சாக்கடை திட்டத்தை மீண்டும் துவங்க விடாமல் தடுப்பது யார்? 

தமிழக முதல்வர் பதில் சொல்வாரா?” என வினா எழுப்பியுள்ளது.