×

"அரசியல் எதிரிகள் எழுதிய கடிதத்தால் வழக்கு மாற்றம்"- ஐகோர்ட்டில் அமைச்சர் பொன்முடி தரப்பு வாதம்

 

அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என  அமைச்சர் பொன்முடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக,  அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்ட வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு  வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியதுதான் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு மாற்றும்படி நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என்றார். 

அவ்வாறு மாற்றுவது தொடர்பாக தங்களிடம் கருத்தை கூட கேட்காத நிலையில், வழக்கை மாற்றியதற்கு தாம் எப்படி பொறுப்பேற்பது என வாதிட்டார். வேலூர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிந்து நான்கு நாட்களில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது, ஆனால் அந்த நீதிபதியால் இந்த வழக்கு ஒன்பது மாதங்கள் விசாரிக்கப்பட்டதாகவும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார். மேலும், பொன்முடியின் அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பின்னர் தான் வழக்கின் விசாரணை விழுப்புரத்திலிருந்து, வேலூருக்கு மாற்றப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறினார். எனவே அந்த கடிதத்தை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாக நிர்வாக ரீதியாக தன்னால் உத்தரவு பிறபிக்க முடியாது எனவும், மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக கூறினார். 

தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சட்டசபையில் பொன்முடியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு மற்றும் அரசியல் திறன் காரணமாக திமுக ஆட்சியில் 1996-2001,2006-2011 என இரண்டு முறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா-வால் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்ததாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் ஊடகங்களின் வெளிச்சம் அதிகமாக உள்ளதாகவும், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததாலேயே தம்மை குற்றவாளியாக சித்தரிப்பதாக கூறினார். வேலூர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.பசந்த் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தனது தரப்பை வாதத்தை விரிவாக வைப்பதற்கு அவகாசம் வேண்டும் எனக்கோரி டிசம்பர் 27ம் தேதி வழக்கை ஒத்திவைக்க கோரினார். 

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தார். அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அதற்குள் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து  விட்டதாகவும் கூறினார். இருப்பினும், லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.