×

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது- அர்ஜூன் சம்பத்

 

ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த தேர்தலின் போது அமல்படுத்த வேண்டும் இதனால் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், “சந்திராயன் மூன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு அதன் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது இஸ்ரோ அதேபோன்று சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக நேற்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது மற்றொரு விண்கலம் இந்த சாதனைகளை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும், பணம் மிச்சமாகும் செலவுகள் மிச்சமாகும். இந்தத் திட்டத்தை சிலர் எதிர்க்கின்றனர். அதை அந்தபுறம் தள்ளிவிட்டு இந்த ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும். இதிலிருந்து அரசு பின்வாங்க கூடாது, தேர்தலிலே தில்லுமுல்லு செய்துவிட்டு வெற்றியை எட்டு விடலாம் என்று நினைக்கும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இதை எதிர்க்கிறது. இது தவறானது. போலிகளை ஒழிப்பதற்காக ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் திமுக வெளியிட்ட கட்சிகள் எதிர்த்தது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைக்கும் போதும் அவர்கள் எதிர்த்தனர். இவற்றையெல்லாம் இணைத்து அதன் மூலமாக டிஜிட்டல் இந்தியா உருவாகி போலிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. லஞ்சம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் எதிர்த்தவர்கள் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு இல்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை கட்டிக் காக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு மட்டுமல்லாமல், அமைச்சர் பொறுப்பில் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது உடனடியாக சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் கிறிஸ்தவ ஒழிப்பு மாநாடு மற்றும் முஸ்லிம் ஒழிப்பு மாநாடு ஆகிய நடத்தினால் இரண்டு அமைச்சர்களும் கலந்து கொள்வார்களா? மேலும் சனாதனத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். இவர் அதை செய்ய வேண்டும் என்றால் முதலில் அவருடைய தாயார் துர்கா ஸ்டாலினிடமிருந்து தொடங்க வேண்டும்.

அதை விடுத்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இது போன்ற மாநாடுகளில் அமைச்சர்கள் கலந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் உதயநிதி மகன் இன்பநதிக்கு பாசறை சுவரொட்டி விவகாரத்தில் புதுக்கோட்டை சேர்ந்த இரண்டு திமுக நிர்வாகிகள் மீது அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது ஒரு நாடகம். உதயநிதிக்கு அடுத்தபடியாக அவர்தான் திமுகவை வழி நடத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி. வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என்றார்.