×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேரை போலீஸ்காரவலில் விசாரித்த போது திருவேங்கடம் என்பவர் தப்பிச்சென்ற நிலையில் அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவல் முடிந்து பத்து பேரை நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். 

போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்த நிலையில் இந்த சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகரன், சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து போலீசார் அடைத்தனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் பூந்தமல்லி தனிக்கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் என்பவரது தந்தையான குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணை செயலாளராக இருந்த மலர்க்கொடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.