×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- வழக்கறிஞரிடம் பல மணிநேரம் விசாரணை

 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக பார் கவுன்சில் முன்னாள் செயலாளரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று சென்னை காவல்துறை சார்பாக பாண்டிச்சேரி தமிழ்நாடு பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று 12 மணி அளவில் எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியம் விசாரணை அலுவலகத்திற்கு சென்ற அவரிடம் மூன்று மணி வரை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சில விளக்கங்களை கேட்டு நேர்மையான முறையில் விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில்,  “என்னிடம் விசாரணை நடத்தியதற்கான காரணம் நான் 2015 இல் இருந்து 2024 வரை பார் கவுன்சிலில் பணியாற்றியுள்ளேன். தற்பொழுது தான் பணியை ராஜினாமா செய்து விட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். பார் கவுன்சிலில் பணியாற்றிய காலகட்டத்தில் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? வழக்கறிஞர்கள் மீது புகார்கள் வந்தால் பார் கவுன்சிலில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக ஏதாவது தெரியுமா? என விசாரணை நடத்தினார்கள். அதற்கு எனக்குத் தெரிந்த விவரங்களை அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாகவும், வழக்கறிஞர் செயல்பாடுகள் குறித்தான கேள்விகளும் மட்டுமே கேட்கப்பட்டது.


நான் பார் கவுன்சிலின் செயலாளராக பணியாற்றியதன் அடிப்படையில் மட்டுமே என்னை அழைத்து விசாரணை செய்தார்கள். பார் கவுன்சிலில் வழக்கறிஞர் குறித்த புகார்களின் பெயரில் என்ன மாதிரியான விசாரணைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்தான கேள்விகளை கேட்டார்கள், அதற்குரிய விளக்கங்களை நான் வழங்கினேன். என்னிடம் விசாரணை நடத்திய பிறகு நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறினார்கள், என்னிடம் விசாரணையும் கண்ணியமான முறையில் நடத்தப்பட்டது. மேலும் விசாரணையில் இருக்கும் பட்சத்தில் அதற்கும் முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்பதையும் தெரிவித்துள்ளேன். வழக்கறிஞர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிகம் இருக்கிறார்கள் அதுகுறித்த கேள்விக்கும் பதில் அளித்தேன்” என்றார்.