ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைகோர்த்த பரம எதிரிகள்- பரபரப்பு பின்னணி
மயிலாப்பூர் சிவகுமாரின் கூட்டாளி அப்புவும், பரம எதிரி மலர்க்கொடியும் கொலை திட்டத்தில் கை கோர்த்தது ஏன்? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை கைதியும் பிரபல ரவுடியுமான நாகேந்திரன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரவுடி நாகேந்திரன் தவிர 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் டெல்லியில் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அசோக் நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல தாதா சிவகுமாரின் நெருங்கிய நண்பர் ரவுடி புதூர் அப்பு. இவர் நான்கு கொலை வழக்குகள் உள்பட பதினாறு வழக்குகளில் தொடர்புடையவர்.
மயிலாப்பூர் சிவகுமாரின் பரம எதிரி வழக்கறிஞர் மலர்கொடி. தனது கணவர் தோட்டம் சேகரை கடந்த 2001ல் மயிலாப்பூர் சிவகுமார் கும்பல் கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக கூலிப்படை கும்பல் உதவியுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாப்பூர் சிவகுமாரை கொலை செய்து 20 ஆண்டுகால பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த வழக்கில் மலர் கொடியின் மகன்கள் அழகுராஜா, பாலாஜி ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன், சீசிங்ராஜா, சம்பவம் செந்தில், ஆற்காடு சுரேஷ் என 4 ரவுடிகள் தலைமையிலான கும்பலை ஈடுபட்டுள்ளனர் எனபோலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மறைந்த தாதா மயிலாப்பூர் சிவகுமாரின் பரம எதிரியுமான மலர்கொடியும் மயிலாப்பூர் சிவகுமாரின் நெருங்கிய கூட்டாளியுமான புதூர் அப்புவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் மலர்கொடி சிக்கினார். இதே போல கொலையாளிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்த புதூர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். பரம எதிரிகளான இருவரும் ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டத்தில் எப்படி சேர்ந்தார்கள். ஒருவருக்கொருவர் தெரிந்தே இந்த கொலை திட்டத்துக்கு உடந்தையாக இருந்தார்களா? ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள், மலர்கொடி ,புதூர் அப்பு இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாத வகையில் அவர்களுக்கான வேலையை கொடுத்து, தங்களது திட்டத்தை நிறைவேற்றினார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இரு தரப்பும் பகையை மறந்து இணைந்து செயல்பட தொடங்கி விட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.