×

2 மாதங்களுக்கு முன்பே எச்சரித்த போலீஸ்... நிழலை கூட நெருங்க முடியாது எனக்கூறிய ஆம்ஸ்ட்ராங்

 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட எட்டு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பூந்தமல்லி காவல் நிலையத்தில் சரணடைந்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு கும்பலுக்கு பண உதவி, சட்ட உதவிகள் செய்வதாக உறுதி அளித்து இந்த கொலையை செய்ய சொன்னது யார்? என்ற கோணத்தில் விசாரணையானது தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கையாக இருக்கும்படி ஆம்ஸ்ட்ராங்கிடம் உளவுத்துறை போலீசார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த 2023 ஆகஸ்ட் 18ஆம் தேதி பட்டினம்பாக்கம் லூப் சாலையில் கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆற்காடு சுரேஷின் கூட்டாளி மாதவனும் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அரக்கோணம்  ஒன்றரை கண் ஜெயபால், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சுதாகர், ஜான் கென்னடி மற்றும் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷை கொலை செய்வதற்கு நெல்லை கூலிப்படைக்கு 10 லட்சம் ரூபாய் தொகை பேசப்பட்டது. இந்தத் தொகையை ஆம்ஸ்ட்ராங்கும், பாம் சரவணனும்( 2015 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்ட தென்னரசுவின் தம்பி பாம் சரவணன்) தான் கொடுத்துள்ளனர் என பொன்னை பாலு கருதியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கும், பாம் சரவணனும் பண பலம் மற்றும் அரசியல் செல்வாக்கை வைத்து தங்களுடைய பெயரை ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் சேர்க்காதவாறு பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இனி சென்னை பக்கம் தலை காட்டக்கூடாது. என்னுடைய ஆட்கள் உன்னை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். சிக்கி விடாதே சின்னாபின்னமாகி விடுவாய் என ஆம்ஸ்ட்ராங் மிரட்டியதாக தெரிய வருகிறது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை பழி வாங்குவதற்கு, தமது கும்பலை பொன்னை பாலு தயார்படுத்தி வைத்துள்ளார். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பழிவாங்குவதற்கு தயாராகவே இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்கை தொடர்பு கொண்ட பொன்னை பாலு, என்னுடைய அண்ணன் கொலை வழக்கிலிருந்து பணபலத்தால் தப்பி விட்டாய்.. ஆனால் என்னிடமிருந்து நீ தப்ப முடியாது. உன்னுடைய கதையை முடித்து கணக்கு தீர்க்கிறேன் பார் என மிரட்டியதாக தெரிய வருகிறது. ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பொன்னை பாலுக்கும் செல்போனில் நடந்த மோதல் விவகாரம் உளவுத்துறை போலீசாருக்கு  தெரிந்து, கவனமாக இருக்கும்படி ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் எச்சரித்துள்ளனர். என் நிழலை கூட நெருங்க முடியாது சார் என ஆம்ஸ்ட்ராங்க் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.


பொன்னை பாலு மிரட்டிய விவகாரம் வெளியில் தெரிந்தால் தனது கெத்துக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என கருதிய ஆம்ஸ்ட்ராங், இது தொடர்பாக போலீஸிடம் புகார் செய்யவும் இல்லை நெருங்கிய நண்பர்களிடமும் கூறவில்லை என தெரிய வருகிறது. இந்த நிலையில் தான் பல நாட்களாக ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கையை வேவு பார்த்து இந்த கும்பல் கொலையை அரங்கேற்றியுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.