×

ஆளுநரை சந்திக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி!

 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூர் திருவேங்கடம் சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆடு தொட்டி அருகே சென்றபோது போலீசாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார்.

புழல் வெஜிடேரியன் நகரில் காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் திருவேங்கடத்தை சுற்றி வளைத்த போது, தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து  போலீசாரை நோக்கி சுட்டார். இதையடுத்து தனிப்படை காவல் ஆய்வாளர்  முகமது புகாரி ரவுடி திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டார் . இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது மார்பில் குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் உயிரிழந்தார். 


இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பொற்கொடி ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளார். ஆளுநர் ரவியை சந்திக்க பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.