×

ஆருத்ரா கோல்டு டிரேடிங்- மோசடி செய்த பணத்தை சினிமாவில் முதலீடு

 

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சினிமாவில் முதலீடு செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 ஆயிரம் ரூபாய் மாதம் வட்டி என தெரிவித்து சுமார் 2438 கோடி ரூபாய் மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சமீபத்தில் துபாயில் பதுங்கி இருந்த உரிமையாளர் ராஜசேகரை துபாய் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட உரிமையாளர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வரும் சட்ட நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகரும் பாஜக நிர்வாகிகளுமான ஆர் கே சுரேஷிடம் போலீசார் முக்கிய ஆவணங்களை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி சினிமாவில் முதலீடு செய்திருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு ஆருத்ரா பிக்சர்ஸ் பைனான்ஸ் செய்து உள்ளனர்? ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பட தயாரிப்பு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தை சினிமாவில் யார் யாருக்கெல்லாம் பைனான்ஸ் செய்துள்ளனர் என்ற விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் ஆர் கே சுரேஷ் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம் பட தயாரிப்பு தொடர்பாக வாங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.