×

மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் - தினகரன் கண்டனம்!!

 

 மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருப்பதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே  மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.  

காளையார்கோவில் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளான ஏனாவரம், புதுப்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் படி அங்கு சென்ற வி.ஏ.ஓ திரு. சேகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ படுகொலை கொலை, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி வி.ஏ.ஒ மீது கொலைவெறித் தாக்குதல் ஆகிய சம்பவங்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ மீது தாக்குதல் என தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவங்களின் மூலம், மணல் திருட்டை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகிறது. 

எனவே, மணல் திருட்டு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, மணல் அள்ளுவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதோடு, அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.