×

அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்..?- பாலச்சந்திரன் பேட்டி

 

வடகிழக்கு பருவ மழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக  சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் வட தமிழகம் மற்றும் தெற்கு அந்தமான் கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நடந்து செல்ல கூடும். இதன் காரணமாக அடுத்த வரும் 4 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நாளை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14-ம் தேதி கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 15ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு  35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவு 256 மில்லி மீட்டர் இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 259 மில்லி மீட்டர் இது இயல்பை விட ஒரு சதவீதம் குறைவு என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை. அது  ஏற்கனவே கடற்கரை பகுதியில் தான் உள்ளது. கடந்த 7,8,9 தேதியில் வங்கக்கடலில் உள்ள வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையே வடக்கு பகுதியில் மேற்கு திசை காட்டும் தென்பகுதிக்கு கிழக்கு திசை காற்று சென்றுள்ளது. இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக உருவாகியது” என்று கூறினார்.