×

ஒரே நேரத்தில் பலத்த மழை பெய்யுமா என கணிக்க முடியாது- பாலச்சந்திரன்

 

புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிககனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புயல் நாளை பிற்பகல் புதுவைக்கு அருகே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 70 -90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்.


காற்றின் வேகம், காற்று குவிதலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, முன்னறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டது. அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களில் இது மாறுபட்டது. ஒவ்வொரு கணிப்பின்போதும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் மாற்றம் காணப்பட்டது. ஒரேநேரத்தில் பலத்த மழை பெய்யுமா, அல்லது பரவலாக மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.