×

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து

 

அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில்,  பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.  விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 17 வயது  சிறுவனின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் சிலர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளால் குற்றப்பிரிவு சிஐடி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்தது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பிற்கேற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.