‘மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்’ - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..
சுதந்திர தினத்தியொட்டி தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தி சுதந்திர தின விழா கொண்டாடப்படும். அவ்வாறு தேசியக் கொடி ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடியை ஏற்றி விழாவை கொண்டாடலாம். ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விழுந்தினர்களாக அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான கொடியை பயன்படுத்தக் கூடாது. மேலும், தேசியக் கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசியக் கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.