பெங்களூரு கட்டிட விபத்து : 2 தமிழர்கள் உள்பட 8 பேர் பலி..!! 3 பேர் கைது..
பெங்களூருவில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நில உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் பாபுசா பாள்யா என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த ஆறு மாடி , செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4 மணி அளவில் கனமழைக்கு தாங்காமால் அடியோடு இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 22 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரோடு மீட்கப்பட்டுள்ள 14 நபர்களில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள கஜேந்திரன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முறையான அனுமதியின்றி தரமற்ற முறையில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது 8 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக எண்ணூர் காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதனையடுத்து நில உரிமையாளர்களான தந்தை முனி ரெட்டி, மகன் புவன் ரெட்டி மற்றும் கட்டிடத்தை கட்டி வந்த ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பெங்களூரு மாநகராட்சியின் மகாதேவபுரா மண்டலம் ஹொரமாவு துணைப்பிரிவின் உதவி செயற்பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.