×

பறிமுதல் செய்த பாரத மாதா சிலையை பாஜகவினரிடம் ஒப்படைக்கவும் : உயர் நீதிமன்றம்..!

 

விருதுநகர் மாவட்டம் சூரக்குண்டு அருகே விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகம் உள்ளது. அலுவலகம் முன்பு வெளியே மக்களுக்கு தெரியும் வண்ணம் “பாரத மாதா” சிலை நிறுவப்பட்டிருந்தது. அனுமதி பெறாமல் சிலை வைத்ததாக கூறி சிலையை வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அங்கிருந்து அகற்றினர்.

இதையடுத்து முன் அறிவிப்பின்றி பட்டா இடத்திற்குள் நுழைந்து, “பாரத மாதா” சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை திரும்ப ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி விருதுநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜகோபால் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,”பாரத மாதா” சிலையை பாஜகவினரிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு  உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.