×

பொதுமக்களுக்கு இடையூறாக பிறந்தநாள் கொண்டாட்டம்- தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

 

தேனியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி மாவட்ட தலைவராக இருப்பவர் பாண்டியன் என்ற லெஃப்ட் பாண்டி(44). இவரது பிறந்த நாள் நேற்று முன்தினமான நவம்பர் 10-ல்  கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே லெஃப்ட் பாண்டியை வாழ்த்தி விஜய் ரசிகர்களும், தவெக கட்சியினரும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் வைத்தனர். அவற்றில் குறிப்பாக வருங்கால அமைச்சரே! தேனியின் அடையாளமே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றது.

இந்நிலையில் நவம்பர் 10 ஆம் தேதியன்று மாலை அவரது சொந்த ஊரான கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள லெஃப்ட் பாண்டியின் அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அதனை முன்னிட்டு கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள தேவர் சிலை அருகில் இருந்து ஏராளமான தவெக கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேன் மூலம் ஆளுயுர ராட்சத மலர் மாலை லெஃப்ட் பாண்டிக்கு அணிவித்து தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக கொண்டாடப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், எந்தவித அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தேனி விஏஓ ஜீவா புகாரில், தவெக தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் என்ற லெஃப்ட் பாண்டி மீது BNS 189(2), 126(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தேனி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.