×

உடன்கட்டை ஏறும் வழக்கம் சனாதன தர்மத்தில் இல்லை- அண்ணாமலை

 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சனாதனத்தை அழிப்போம் எனக் கூறி திமுக போட்டியிட தயாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய உதயநிதிக்கு முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் இந்தியா முழுவதும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். சனாதன தர்மம் என்பது யாருக்கும் எதிரானது அல்ல, சனாதன தர்மத்திற்கு ஆதியும் கிடையாது முடிவும் கிடையாது, அது நிலைத்திருக்கக்கூடியது. மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பே சனாதன தர்மம் இருந்தது. உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பது சனாதன தர்மத்தில் இல்லை. சனாதன தர்மத்தில் உள்ள குறைகள், குற்றங்களை கொண்டுவந்தது சில மனிதர்கள்தான். அதை சனாதனத்தை பின்பற்றுபவர்களே எதிர்த்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சனாதனத்தை அழிப்போம் எனக் கூறி திமுக போட்டியிட தயாரா?  

அந்நிய படையெடுப்பின்போது ஒரு வீரன் கொல்லப்பட்டால் அவரின் மனைவியை அவர்கள் பரிசுப் பொருளாக எடுத்துச் செல்கின்றனர். அதனால் அந்த பெண் தன் கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தொடங்கப்பட்ட நிகழ்வுதான் உடன்கட்டை ஏறுதல். இது சனாதன தர்மத்தில் இல்லை. சனாதன தர்மத்திற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுக ஏன் பட்டியலின முதலமைச்சரை பதவியில் அமர வைக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.