×

கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு அடிமையாக இருக்க முடியாது - அண்ணாமலை

 

சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க  முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அமைச்சர்களாக இருந்தபோது வசூல் செய்து பழக்கப்பட்டதால்தான் அனைத்தையும் வசூலாகவே பார்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கைகளுக்கு, சி.வி. சண்முகம் நேர்மையை பற்றி பாடம் எடுக்க தேவையில்லை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தினமும் பாஜக நடைபயணத்திற்கு 15 ஆயிரம் பேர் வருகிறார்கள். நான் நடைபயணம் சென்றால் வசூல் எனக் கூறுகிறார்கள்.

சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார், பகலில் ஒரு மாதிரி பேசுவார். சி.வி. சண்முகத்திற்கு வசூல் செய்துதான் பழக்கம். நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். நல்ல போலீஸ்காரர்களை பார்த்தால் திருடனுக்கு பயம் வரும். கடும் சொற்கள் எனக்கும் பேச தெரியும். தரத்தை தாழ்த்தி அவதூறான வார்த்தையை முன்வைக்க மாட்டேன். நானும் மரியாதை கொடுத்து அரசியல் செய்துவருகிறேன். தமிழகத்தில் மாற்றம் வந்தே தீரும். 

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இளைஞர் சக்தி தீர்மானிக்கும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் கும்பிடு போட்டு அடிமையாக இருக்க  முடியாது. தனிக்கட்சி, தனி கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. என் நேர்மையை பற்றி தவறாக பேசினால் சும்மா இருக்க மாட்டேன். நேர்மையான அரசியல்வாதிகளுக்கு நான் பேசும் அரசியல் புரியும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு நேர்மைக்கான அர்த்தம் தெரியாது.

சி.வி. சண்முகத்தின் விமர்சனத்திற்கு பதில் சொல்லி எனது தரத்தை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. சி.வி.சண்முகத்தின் பகுதிக்குள் பாஜக இன்னும் செல்லவில்லை. பாஜக வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்கள். சி.வி. சண்முகம் பற்றி எல்லாருக்கும் தெரியும்” என்றார்.