×

திமுகவினர் மனைவியை விற்று பிழைப்பவர்கள் என பெரியார் கூறியதை திமுக அலுவலகம் முன் வைக்கலாமா?- அண்ணாமலை

 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பெருங்கோட்டப் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக வருமான வரித்துறை இன்னும் எதுவும் கூறவில்லை. வருமான வரித்துறையின் செய்திக்குறிப்பு வந்த பிறகு அதுகுறித்து கூறுகிறேன். ஆனால் அவர் யார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அமலாக்கத்துறை சோதனைக்கு பாஜக காரணம் என கூறும் மல்லிகாஜூன கார்கே போன்றவர்கள் புரிந்து பேச வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அஜித் பவார் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும் , அவர் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் தண்டனை அனுபவிக்க மாட்டார் என கூற முடியாது. 

யாத்திரைக்கு எங்கிருந்து பணம் வந்தது என திருமாவளவன், ஜோதிமணி குற்றம் சாட்டுகின்றனர். எஞ்சிய 131 தொகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் வந்து பாருங்கள். அந்தந்த தொகுதியில் இருப்போர் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க வேண்டும். ராகுல்காந்தி போல நான் எல்லா பகுதியில் இருந்தும் ஆட்களை திரட்டி யாத்திரையை நடத்தவில்லை. பாஜக எழுச்சியை ஏற்க முடியாமல் இப்படி சொல்கின்றனர். ஆளுங்கட்சி மற்றும் ஆட்சியில் இருந்த கட்சியால்தான் தொழிலதிபர்களை மிரட்ட முடியும் , நாங்கள் மிரட்டுவதாக கூற காரணம் எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளதால்தான். அனைத்து கட்சி கரை வேட்டி அணிந்தவர்களும் பாஜக யாத்திரையில் பங்கேற்கின்றனர். தொழிலதிபர்கள் எங்களை ஆதரித்தாலும் நான் அதை தவறாக பார்க்கவில்லை, காரணம் நாங்கள் வளர்ச்சி அடைந்ததால்தான் எங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என அர்த்தம். 


கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரிடம் இருந்து ஜோதிமணி பணம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது ,   ஜோதிமணி வழக்கு தொடர்ந்தால் என்னிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பிக்க தயார். பெண்களை  அவமதிக்கும் வகையில் நிதிஷ் குமார் பேசியதற்கு கனிமொழியும் ,தமிழக முதலமைச்சரும் ஏன் கருத்து கூறவில்லை என ஆச்சரியமாக உள்ளது. கருத்து தெரிவித்தால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை நீக்கி விடுவார்கள் என்பதில் அமைதியாக இருக்கின்றனர். இந்தியா கூட்டணி உருவான பிறகு திமுகவின் ஆபாச பேச்சு அதில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் பரவிவிட்டது , போட்டிபோட்டு பேசுகின்றனர். சுய நலத்திற்காக அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். 

பாஜக அலுவலகத்தில் வேலை செய்பவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் மணல் குவாரி அதிபர்களிடம் நான் பணம் வாங்கியதாக கூறுகின்றனர். மணல் குவாரி அதிபரின் வீட்டில்   அவர் தங்கி இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது , அவருக்கும் மும்பையில் வசித்து வரும் தமிழரான மணல் குவாரி அதிபருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சனாதனத்தை ஒழிப்பதாக திமுக கூறியதால் பெரியார் சிலை தொடர்பாக  நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை கூறுகிறோம். அதிமுக ஆட்சியில் அதற்கான அவசியம் எழவில்லை. முத்துராமலிங்க தேவர் , வைத்தியநாத ஐயர் சிலைகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு முன்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 


சாமியை நம்புபவர்கள்தான் கோயிலுக்கு செல்வார்கள் , 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தால்  கோயில் முன்பாக பெரியார் சிலை வைப்போம் என்று  கூறினார்களா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு வழி , வந்த பின்பு ஒரு வழி என்று திமுகவினர் செயல்படுகின்றனர். உலகில் சனாதனம் குறித்து பல பத்தாயிரம் புத்தகம் உள்ளது , ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட , ஒரு பேராசிரியர் எழுதிய ஒரே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு உதயநிதி கருத்து கூறியுள்ளார். திமுகவினர் மனைவியை விற்று பிழைப்பவர்கள் என பெரியார் கூறியதை திமுக அலுவலகம் முன்பு கொண்டு சென்று வைக்கலாமா?” என்றார்.