"கிணற்றுத் தவளைபோல் ஈபிஎஸ் பேசியுள்ளார்" - அண்ணாமலை
நாளை புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு விழா எடுக்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசிடம் அனுமதி வாங்கி விழா நடத்தலாம் பாஜக உடன் இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டது மகிழ்ச்சி. காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் உள்ளிட்டோருக்கு சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. நாளை இதேபோல் ஜெயலலிதாவுக்கு விழா எடுக்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசிடம் அனுமதி வாங்கி விழா நடத்தலாம் பாஜக உடன் இருக்கும். கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத்தவளைபோல் இபிஎஸ் பேசியுள்ளார். நாணய வெளியீட்டு விழா தொடர்பாக அதிமுக அரசியல் பேசுவது வேதனை. எம்.ஜி.ஆர். நாணயத்தை இவர்களே வெளியிட்டு கொண்டது ஒரு பெருமையா..? குடியரசு தலைவர் வெளியிட்டு அதை பிரதமர் வாங்கி இருக்க வேண்டும்.. அது தான் அவருக்கு பெருமை.. தி.மு.க. அதை சரியாக பயன்படுத்தி கொண்டது
அரசியல் லாபத்துக்காக பாஜகவையும், மத்திய அரசையும் எடப்பாடி பழனிசாமி குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான் ஆளுநருக்கும், ஸ்டாலினுக்கும் ரகசிய தூதராக இருந்தேன் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதிலிருந்து அவருக்கு எவ்வளவு அரசியல் புரிதல் இருக்கிறது என்பது தெரிகிறது” என்றார்.