×

திமுக அரசு ஒட்டுமொத்த முதலீட்டையும் தங்களுடைய முன்னெடுப்பாகக் காட்ட முயற்சி- அண்ணாமலை குற்றச்சாட்டு

 

செம்கார்ப் நிறுவனத்தின் முதலீடு குறித்து வெளியான எந்த செய்திக் கட்டுரைகளிலும், இதற்காக, மத்திய அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,“நேற்றைய தினம், தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி ரூபாய் முதலீட்டில் அதி நவீன பச்சை அமோனியா ஆலை அமைக்க, அடிக்கல் நாட்டியிருக்கிறது. செம்கார்ப் நிறுவனத்தின் இந்த ஆலை மூலம், ஒரு ஆண்டுக்கு 2,00,000 மெட்ரிக் டன் பசுமை அமோனியா, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 

செம்கார்ப் நிறுவனத்தின் முதலீடு குறித்து வெளியான எந்த செய்திக் கட்டுரைகளிலும், இதற்காக, மத்திய அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. திமுக அரசு, இந்த ஒட்டுமொத்த முதலீட்டையும், தங்களுடைய முன்னெடுப்பாகக் காட்ட முயற்சித்திருக்கிறது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு குறித்து, குறிப்பிட்டிருந்தார். அதே ஆண்டு சுதந்திர தின விழா உரையில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை அறிவித்தார்.

வரும் 2070 ஆம் ஆண்டுக்குள்ளாக, நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தைத் தொடங்கினார். வரும் 2029-30 நிதியாண்டு வரை தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு, ₹19,744 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு, மத்திய அரசின் நிதிச் சலுகைகள் வழங்கப்படும். இதன் அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி கோரலில், செம்கார்ப் உட்பட 13 நிறுவனங்கள் பங்கேற்றன. 

கடந்த 2024, ஜூலை மாதம், 31 ஆம் தேதி அன்று, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி அவர்கள், மக்களவையில், பத்து நிறுவனங்களுக்கு, ஊக்கத்தொகையுடன் ஆண்டுக்கு 4,12,000 டன்கள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவித்தார். ஊக்கத்தொகை மட்டுமல்லாது, பரிமாற்றக் கட்டணச் சலுகையையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனை அடுத்து, கடந்த 20 ஆகஸ்ட் 2024 அன்று, இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பசுமை அமோனியா ஏற்றுமதி செய்வதற்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவிற்கு, மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தலைமை தாங்கினார். செம்கார்ப் நிறுவனம், ஸோஜிட்ஸ் நிறுவனம் மற்றும், கியூஷு எலக்ட்ரிக் பவர் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு பசுமை அமோனியா ஏற்றுமதி விநியோகத்தை உறுதிப்படுத்துகிறது.


கடந்த 2024, பிப்ரவரி மாதம், நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7,056 கோடி செலவில், வெளிப்புற துறைமுக முனையத்துக்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி துறைமுகத்தின் கொள்கலன் திறனை அதிகரிக்கவும், தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும், தளவாட செலவுகளை குறைக்கவும் இந்த முனையம் பெரும்பங்கு ஆற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், ஒரு முக்கிய இடமாற்ற மையமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் உருவாகவும், இந்தத் திட்டம் உதவும். இவ்வாறு, அதிக சரக்குகளை கையாளும் வகையில் ஏற்படுத்தப்பட்ட வஉசி துறைமுகத்தின் விரிவாக்கமும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கமும், மற்றும் பசுமை அமோனியா தயாரிக்க மத்திய அரசு வழங்கும் நிதி உதவி மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் காரணமாகவே, செம்கார்ப் நிறுவனம், தமிழகத்தில் இந்த முதலீட்டை செயல்படுத்தியிருக்கிறது. இந்த முதலீடு தமிழகத்திற்கு வருவதை கெடுக்காமல் இருந்தது மட்டுமே திமுகவின் பங்களிப்பு.

எனவே, தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், செம்கார்ப் நிறுவன முதலீட்டைக் கொண்டு வந்தது தாங்கள்தான் என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொள்வதை விடுத்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கமும், அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களும், தூத்துக்குடி வஉசி துறைமுக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பும் தான் காரணம் என்ற உண்மையை அங்கீகரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.