×

வீடு வாங்க விரும்புவோர் திமுகவினர்‌ பணம்‌ சம்பாதிக்க கூடுதல்‌ பணம் கட்ட வேண்டுமா?- அண்ணாமலை

 

பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்‌, யாரிடமும்‌ கலந்தாலோசிக்காமல்‌, பொதுமக்களின்‌ கருத்துக்களையும்‌ கேட்டறியாமல்‌, சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த ஆண்டு மார்ச்‌ 30 அன்று திமுக அரசு ஒரு சுற்றிக்கையை வெளியிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல்‌ 1 முதல்‌ இந்த உயர்வு அமலுக்கு வந்தது. சுமார்‌ 50% அளவுக்கு வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதால்‌ பொதுமக்களும்‌, கட்டுமான நிறுவனங்களும்‌ பெரிதும்‌ பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்‌. 

இதனை அடுத்து, மாண்புமிகு சென்னை உயர்‌ நீதிமன்றத்தில்‌ இந்திய ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்களின்‌ கூட்டமைப்பான கிரெடாய்‌ மற்றும்‌ சில கட்டுமான நிறுவனங்கள்‌ தொடர்ந்த வழக்கில்‌, சட்டவிதிகளின்‌ படி, துணைக்‌ குழுக்களை அமைத்து, அவற்றின்‌ அறிக்கைகளை ஆய்வு செய்து, பொதுமக்களின்‌ கருத்துக்களையும்‌ கேட்ட பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்‌ என்றும்‌, உரிய நடைமுறைகளைப்‌ பின்பற்றாமல்‌ தமிழக அரசு பிறப்பித்த வழிகாட்டி மதிப்பு உயர்வு அறிக்கை சட்டவிரோதமானது என்றும்‌, உரிய நடைமுறைகளைப்‌ பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும்‌ வரை, 2017 ஆம்‌ ஆண்டு அமலில்‌ இருந்து வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம்‌ தீர்ப்பளித்தது. ஆனால்‌, தமிழக அரசு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ தீர்ப்பை மதிக்காமல்‌, தொடர்ந்து கூடுதல்‌ கட்டணத்தையே வதலித்து வருகிறது. 

இது மாண்புமிகு உயர்‌ நீதிமன்றத்தை அவமதிக்கும்‌ செயல்‌ ஆகும்‌. தொடர்ந்து பொதுமக்களும்‌, பல்வேறு தரப்பினரும்‌ கடுமையான எதிர்ப்பினைத்‌ தெரிவித்த பின்னரும்‌, தமிழக அரசு அவற்றைக்‌ கண்டுகொள்ளாமல்‌, சட்டவிரோதமாக, நீதிமன்றத்‌ தீர்ப்புக்கு எதிராகக்‌ கூடுதல்‌ கட்டணத்தை வசூலிப்பதன்‌ நோக்கம்‌ பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. தமிழகம்‌ முழுவதும்‌ பத்திரப்பதிவுத்‌ துறையில்‌ பல முறைகேடுகள்‌ நடந்து வருவதும்‌, அமைச்சர்‌ மூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்‌ எழுந்திருப்பதும்‌ பொதுமக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.

அப்படி இருக்கையில்‌, பொதுமக்களுக்காகச்‌ செயல்பட வேண்டிய அரசு, தற்போது யாருக்காகச்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுவது இயற்கையே. தங்கள்‌ கடின உழைப்பில்‌ நிலமோ, வீடோ வாங்க விரும்பும்‌ பொதுமக்கள்‌, திமுகவினர்‌ பணம்‌ சம்பாதிக்க சட்டவிரோதமாக கூடுதல்‌ பணம்‌ கப்பம்‌ கட்ட வேண்டுமா? நீதிமன்றத்‌ தீர்ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும்‌ கூடுதல்‌ கட்டணம்‌ உண்மையில்‌ அரசு கஜானாவுக்குத்தான்‌ செல்கிறதா என்பதில்‌ பலத்த சந்தேகம்‌ ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக திமுக அரசு, பத்திரப்பதிவுத்‌ துறையில்‌ 2017 ஆம்‌ ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும்‌ என்றும்‌, நீதிமன்றத்‌ தீர்ப்புக்கு எதிராக இத்தனை நாட்களாக வசூலித்த கூடுதல்‌ கட்டணத்தை, பொதுமக்களுக்குத்‌ திருப்பித்‌ தர வேண்டும்‌ என்றும்‌ தமிழக பாஜக சார்பில்‌ வலியுறுத்துகிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.