×

"தமிழன், இந்தியன் என பிரிவினை நாடகம்”... மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்

 

தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளாவதற்கு முழுமுதற் காரணமே, திமுக காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவைத் தாரை வார்த்ததுதான். அப்போது தெரியவில்லையா அவர்கள் இந்திய மீனவர்கள் என்று? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள் அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளாவதற்கு முழுமுதற் காரணமே, திமுக காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவைத் தாரை வார்த்ததுதான். அப்போது தெரியவில்லையா அவர்கள் இந்திய மீனவர்கள் என்று? திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, 80க்கும் மேற்பட்ட மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்கள் இந்திய மீனவர்கள் என்பது நினைவுக்கு வரவில்லையா? 

மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தங்கள் குடும்பம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்று, மீனவர்களை வஞ்சித்த திமுக, தற்போது மீனவர் நலன் என்று நாடகமாடுகிறது என்பது மீனவ சமுதாய மக்களுக்கு நன்றாகவே தெரியும். மீனவர்கள் நலன் காக்க உருவாக்கப்பட்ட, ‘தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம்’ முதலமைச்சர் ஸ்டாலின் அரசால் கலைக்கப்பட்டது. 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட மீனவ சமுதாய மக்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றவில்லை. இப்படி, மீனவர்களுக்குத் தொடர்ந்து துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக, மீனவர் நலன் குறித்துப் பேசுவது விளம்பர நாடகமே அன்றி வேறென்ன?

இந்தியக் குடிமக்கள் எங்குப் பாதிப்புக்குள்ளானாலும், நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உடனடியாகச் செயல்பட்டு அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.  உலகின் பல நாடுகளிலிருந்து நமது நாட்டு மக்கள் எந்தப் பாதிப்புமில்லாமல் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழன், இந்தியன் என்று திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் போல, பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்க வேண்டாம். அவர் வகிக்கும் மாநில முதலமைச்சர் பதவிக்கு அது அழகும் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.