×

தமிழக அரசுக்கு டாஸ்மாக் மாடல் அரசு என பெயர் சூட்டலாம்- அண்ணாமலை

 

அரியலூரில் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மற்றும் அரியலூர் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரு இடங்களிலும் இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சார நடைபயணம் மேற்கொண்டார். இதனையடுத்து அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலையருகே கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “காவிரி பிரச்சனையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் நான்கு மாதங்களில் நெல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசுக்கு டாஸ்மார்க் மாடல் அரசு என்று பெயர் சூட்டுவதே பொருத்தம். தமிழக முதலமைச்சர் தற்பொழுது வளர்ச்சித் திட்டங்களில் போட்டி போடவில்லை. புது படம் ரிலீஸ் செய்யப்பட்டால் அந்த நடிகர்கள் பெயரை வைத்து பத்து நாளில் இந்த நடிகர் நடித்த படம் 100 கோடியை எட்டியது, இந்த நடிகர் நடித்த படம் 13 நாளில் 100 கோடியை எட்டியது என்று நடிகர்கள் மத்தியில் போட்டியுள்ளது. ஆனால் இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் அளவிற்கு தமிழக முதல்வர் இரண்டு நாட்களில் டாஸ்மார்க் விற்பனையில் 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளார். இதற்கு தமிழக முதல்வர் வெட்கப்பட வேண்டும். இந்த இரண்டு நாட்கள் மது விற்பனையால் தமிழகத்தில் 20 கொலை மற்றும் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது. டாஸ்மார்க் விற்பனையால் பொதுமக்கள் சந்தோஷமாக இல்லை. 

ஜெகத்ரட்சகன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் மட்டுமே சந்தோஷமாக உள்ளனர். தற்பொழுது அமைச்சர் முத்துசாமி விரைவில் மதுபானங்கள்  சாசே பாக்கெட்டுகளில் விற்கப்படும் என்று கூறியுள்ளார். ஷாம்பு பாக்கெட் போல சாசே பாக்கெட்டுகளில் விற்கப்படும் மதுவால் 100 கோடிக்கு விற்பனையாகும். இதனால் வருடத்திற்கு 44 ஆயிரம் கோடி விற்பனை என்ற இலக்கு 52 ஆயிரம் கோடி இலக்காக மாறும். இதனால் இந்த தமிழக அரசு திராவிட மாடல் அரசு என்று பெயர் சூட்டிக் கொள்வதற்கு பதில் டாஸ்மார்க் மாடல் அரசு என்று சூட்டிக் கொள்வதே பொருத்தமாக இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த பொழுது காவிரியில் நீர் திறப்பதற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு போதிய அளவிற்கு காவிரியில் நீர் திறக்கவில்லை. இதனால் டெல்டா பகுதியில் கடந்த ஆண்டு உணவு தானியத்திற்காக நெல் கொள்முதல் நிலையங்களில் 8 லட்சத்து 35 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபாண்டில் 5 லட்சத்து 28 ஆயிரம் டன் நெல் கொள்முதல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் 3 லட்சத்து 30 ஆயிரம் டன் நெல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 மாதங்களில் நெல் தட்டுப்பாடு ஏற்பட ஆபத்துள்ளதாக அண்ணாமலை  தெரிவித்தார்.  ஒன்பது ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்களை கொடுத்த மோடி அரசு தொடர 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.