×

"ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை" - அண்ணாமலை

 

2023ல் உளுந்தூர்பேட்டை சிப்காட்டில், தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ.2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்தது.திமுக அரசு சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு அறிவித்த திட்டங்களின் நிலை, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்த பலன்கள், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்வுகளை மாவட்டங்களுக்கே சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான, கலைஞர் கருணாநிதியின் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி மகிமைபுரத்தில் சுமார் 131 ஏக்கரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். காலணி தொழிற்சாலை மூலம் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறது திமுக அரசு. அதன் வரிசையில் இன்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ. 1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதலமைச்சர் பெருமைப்பட்டிருக்கிறார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ. 2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த திமுக அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ. 6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி ஆண்டுகள் இரண்டு ஆகின்றன. வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இது போன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.