×

ராமர் கோயில் கும்பாபிஷகத்துக்குப் பின் தினமும் 50,000 பேரை அயோத்தி அழைத்து செல்ல பாஜக திட்டம்

 

கும்பாபிஷகத்துக்குப் பின் தினமும் 50 ஆயிரம் பேரை அயோத்தி அழைத்து செல்ல பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 150 பேரை அழைத்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  இக்கூட்டத்தில், கோவில் கும்பாபிஷேகத்துப் பிறகு அயோத்தியை பிரபலமடையச் செய்வது நமகு கைகளில்தான் இருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது 1.50 லட்சம் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் பணியில் இறங்க வேண்டும்.

அதேசமயம், அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கான வசதி அவர்களிடம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை அழைத்து கட்டாயம் அயோத்தி பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக, இராமர் கோவில் தரிசனத்துக்கு அழைத்து வரும் விஷயத்தில் ஜாதி ரீதியாக எந்தவித பாகுபாடும் பார்க்கக் கூடாது. இது தொடர்பாக, வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். இதன் மூலம், ஒவ்வொரு நாளும் 50,000 பேரை அயோத்திக்கு அழைத்து வந்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும். அதேபோல, தங்களது சொந்த செலவில் வரும் பக்தர்களுக்கு, தங்குமிடம் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் பா.ஜ.க.வே ஏற்றுக் கொள்ளும்.

அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நாடு முழுதும் 430 நகரங்களில் இருந்து, குறிப்பட்ட நாட்களில் மட்டும் அயோத்திக்கு 35 இரயில்கள் பிரத்யேகமாக இயக்கப்படும். ஆகவே, லோக்சபா தேர்தலுக்குள் எப்படியும் நாடு முழுவதும் இருந்து 50 லட்சம் பேரையாவது தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்காக, மாநில அளவில் தொடங்கி, சட்டப்பேரவை தொகுதி அளவு வரை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்று செயல்படுவார்கள். இதில், முக்கியமான விஷம் என்னவென்றால், அயோத்திக்கு பக்தர்களை அழைத்து வரும் விவகாரத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜ.க. கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.