×

அன்னபூர்ணா விவகாரம்- பாஜகவிற்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்: ஹெச்.ராஜா

 

பாஜகவிற்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழிலதிபர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உணவகக் குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன், ஒரே கடையில் ஒரு வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களில் இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி, பன்னுக்கு ஒரு ஜி.எஸ்.டி., கிரீம் வைத்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி என ஏன் இத்தனை ஜிஎஸ்டி? என கேள்வி எழுப்பினார். மேலும், இதனால் வாடிக்கையாளர்களுக்கும், தொழில் நடத்துபவர்களுக்கும் முரண் ஏற்படுவதாக நியாயமான கருத்தையே முன்வைத்தார். இந்த கருத்தை ஆக்கப்பூர்வமான ஒன்றாக கருதி, அவர் குறிப்பிட்ட அந்த பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், குறிப்பிட்ட அந்த தொழிலதிபரை அமைச்சர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து, அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, “பாஜகவிற்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். தேவைப்பட்டால் அன்னபூர்ணா உணவகக் குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசனை நேரில் அழைத்து விளக்கம் பெறலாம். அப்பாத்தாவுக்கு வரி, அம்பானிக்கு வரி இல்லை என திட்டமிட்டு பரப்புகிறார்கள். ராகுல் காந்தி, அமெரிக்காவில் யாருடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் ஆதரவாளருடன் ராகுல்காந்தி பேசி கொண்டிருக்கிறார். ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநில முதல்வரின் பிரதிநிதிகளும் உள்ளனர். நாடு கடத்த வேண்டுமென டிரம்பே கூறும் ஒருவரை ராகுல் சந்திக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.