×

பாஜக ஆட்சியில் தான் ரயில்வே துறை வளர்ந்துள்ளது- எல்.முருகன்

 

விஜயதசமிக்கு விஜய் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை கிழக்கு மாவட்டம் புது தாமரைபட்டியில் கடைகடையாக சென்று புதிய உறுப்பினரை  அவரவர் செல்போன் வாயிலாக சேர்க்கும் பணியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால் விஜயதசமிக்கு விஜய்  வாழ்த்தியது வரவேற்கத்தக்கது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். மக்கள் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது போக போக தெரியும். 


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியன் ரயில்வே பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில் வர இருக்கிறது. சிறிய விபத்தை வைத்து மொத்த ரயில்வேயையும் குறை சொல்ல வேண்டாம். ரயில்வே துறை பாஜக ஆட்சியில் தான் வளர்ந்துள்ளது. ஆனால் கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து திமுகவினர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக ரயில்வே துறை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று ஒரு தோற்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் உருவாக்குகின்றன. சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது குடிதண்ணீர் இல்லாமலும், ஆம்புலன்ஸ் இல்லாமலும் 5 பேர் உயிரிழந்தனர். அதனை பற்றி வாய் திறக்கவே இல்லை. கிராமப்புறங்களில் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை கண்டறிவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம். விளையாட்டில் மிகப்பெரிய வெற்றிகளை இந்தியா அடைவதற்கு பிரதமர் மோடி தான் காரணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.