×

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்- வானதி சீனிவாசன்

 

ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-24-ம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார். பிரதமராகவும், மத்திய நிதியமைச்சராகவும் இருந்த மொரார்ஜி தேசாய் தொடர்ந்து 6 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவர். தொடர்ந்து 7வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. விரைவில் மூன்றாவது பொருளாதார நாடாகவும், சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும் 2047-ல் உலகின் முதல் பொருளாதார நாடாகவும் இந்தியாவை உயர்த்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் அந்த இலக்கை அடையும் நோக்கில் தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பான பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, வேளாண் துறைக்கு ரூ. 1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு,உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஒரு மாத சம்பளம், முத்ரா கடன் வரம்பு ரூ. 20 லட்சமாக அதிகரிப்பு, நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள், ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, தொழிலாளர்களுக்கான அரசு - தனியார் பங்களிப்பில் தங்குமிடங்கள், நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ. 6,000 உதவித் தொகையுடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு, புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு, தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பு, வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 கோடி பலன் பெறும் வகையில், தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு. 

குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு என, ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.