×

யானைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குப்பை கிடங்கை அகற்றுக- வானதி சீனிவாசன்

 

யானைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கோவை சோமையம்பாளையம் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும், கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியை ஒட்டிய சோமையம்பாளையம் கிராமத்தில் குப்பை கிடங்கு உள்ளது. சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினந்தோறும் இங்கு கொட்டப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மலையடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் சோமையம்பாளையம் குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுகின்றன. அப்பகுதியில் யானையின் கழிவுகளில் நாப்கின், மாஸ்க் போன்ற ஆபத்தான கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், யானைகள் உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது. குப்பை கிடங்கால் ஒரு பக்கம் யானைகளுக்கு ஆபத்து என்றால், மறு பக்கம் குப்பைகளை உண்ணும் யானைகள் அந்த வாசனையால் ஈர்க்கப்பட்டு குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாது இயற்கையின் கொடையான மருதமலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

எனவே, யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சோமையம்பாளையம் குப்பை கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.